தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று மூன்று மாநிலங்களில் அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தத் தொழிலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலமான சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்ய மற்றும் பட்டாசு வெடிக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அது 6 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை அளிக்கக்கூடிய அறிவிப்பு. எனவே லட்சக்கணக்கான ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிப்பதற்கான தடை உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ள அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.