பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சி மக்களை கவரக்கூடிய வகையில் பல்வேறு சலுகை மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 10,151 இளைஞர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலமாக வழங்கப்பட்ட ரூ.41.48 கோடி தொழில் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் தொழில்கள் முடங்கியதால், இந்த கடன் பெற்ற இளைஞர்கள் அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதனால் அவற்றை தள்ளுபடி செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 50 ஆயிரம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக கடன் பெற்றவர்கள் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்து மீள முடியும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கும் இதுபோன்ற தொழில்களை குறைக்க வட்டி வழங்கியுள்ளோம் என்று அரசு தெரிவித்துள்ளது.