மணல் கொள்ளை சம்பந்தமான வழக்கு கோரிய மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருவதால், அதை தடுக்க அப்பகுதியிலுள்ள ஒருவர் மனு கோரியுள்ளார். இதையடுத்து அவருக்கு மர்மநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மனுதாரருக்கு ஏன் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் தங்களின் போக்கை மாற்றாமல் இருக்கின்றனர் என்று நீதிபதிகள் தங்களின் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட மனுதாரருக்கு உடனடியாக காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.