சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 100% வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அழைப்பிதழையும் அச்சடித்து வழங்கினர்.
கல்லூரியிலிருந்து மேள,தாளத்துடன் மாணவ-மாணவிகள் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு அரியக்குடி பகுதியில் உள்ள ரயில்வே கேட் வரை சென்றுள்ளனர். செல்லும் வழி எங்கும் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் “பணத்திற்காக வாக்களிப்பது சட்டப்படி குற்றமாகும்” என்று கூறி அழைப்பிதழை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் நூலகர் நாச்சியப்பன், பேராசிரியை வித்தியபாரதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். ராமசாமி தமிழ் கல்லூரியின் முதல்வர் கணேசன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில்க்கான முன்னேற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியை ஜெயமணி செய்துள்ளார்.