பணத்துக்காக நாட்டையே விற்றவர் பேசலாமா ? என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாடியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த 24 ஆம் நாள் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுற்றது. இந்த தோல்வி ஏதோ இருநாட்டு போர் போல மாறியுள்ளது. ஆங்காங்கே இருநாட்டு ரசிகர்களும் மனிதத்தை கடைபிடித்தாலும் ஒரு சிலர் தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி வருவது முகம் சுளிக்க வைக்கிறது.
இந்த நிலையில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வென்றது குறித்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடியாக இந்திய வீரர் ஹர்பஜன் சிங் ஆசிய கோப்பையில் முகமது அமீர் பந்தில் தான் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்த வீடியோவை பதிவிட்டார்.
பதிலுக்கு இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் சிங்க் பந்து வீச்சில் 4 பந்தில் 4 சிக்சர்களை ஷாகித் அப்ரிடி அடித்த வீடியோவை அமீர் பகிர்ந்தார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி போனது. இந்த வாக்குவாதம் தொடர்ந்து நீடிக்க மாறி மாறி இருவரும் வன்மத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போக நீ ஒரு அவமானச் சின்னம் எனவும், பணத்துக்காக கிரிக்கெட்டை விற்றவர் எனவும், முகமது அமீரை ஹர்பஜன்சிங் சாட தொடங்கினார். தொடர்ந்து நீ அதிகம் பேசாதே சமூக ஊடகத்தில் பாயாதே என இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்டு வலைதளத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.