ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு தெருவை சேர்ந்த தங்கமணி(60) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதி ராம் நகரைச் சேர்ந்த ஹாஜா மொய்தீன்(41) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் ஹாஜா மொய்தீன் தன்னிடம் பணத்தை கொடுத்தால் அதனை ஷேர் மார்க்கெட்டில் போட்டு அதன் மூலமாக பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய தங்கமணி காஜா மொய்தினிடம் ரூ.54 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். இது போல் ஹாஜா மொய்தீன் அதே பகுதியில் உள்ள பலரிடம் பல லட்சம் பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அவர் கூறியது போல யாருக்கும் பணத்தை இரட்டிப்பாக்கி தரவில்லை. இதனால் பணம் கொடுத்த அனைவரும் தங்களுடைய பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் தங்கமணி ஆவடியில் உள்ள போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் போது இவர் பல பேரிடமிருந்து இதுவரை ஒரு கோடியே ரூ.15 லட்சத்து 25 ஆயிரம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.