ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த காதலர்கள் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் ஸ்ரீநகரில் 20 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் 3-ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்த இளம்பெண்ணும் சோமயம்பாளையம் பகுதியில் வசிக்கும் வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் வீட்டில் இருந்த 1;லட்ச ரூபாய் பணம், 3 பவுன் தங்க நகைகள் போன்றவற்றை வைத்து காதலனுடன் சேர்ந்து ஆன்லைனில் விளையாடி பணத்தை இழந்துவிட்டார்.
இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் அந்த வாலிபரை அழைத்து நகை மற்றும் பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து கல்லூரிக்கு சென்ற இளம்பெண் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் கல்லூரிக்கு சென்று விசாரித்த போது மாணவி வாலிபருடன் சென்றதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.