கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக பார்வையிழந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அல்லித்துறை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வையிழந்த சத்யபாமா என்ற மனைவி உள்ளார். இவருடைய கணவர் சுரேஷ் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் சுரேஷின் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சத்தியபாமா பல நபர்களிடம் கடன் வாங்கி தன்னுடைய கணவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் உறையூரில் வசிக்கும் ஒருவரிடம் ரூபாய் 1 லட்சம் வாங்கி தரும்படி சத்யபாமா கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த நபர் பீமநகரில் மருந்து கடை நடத்தும் ஒருவரிடமிருந்து ரூபாய் 83 ஆயிரம் வாங்கிக் கொடுத்துவிட்டு இதற்கான வட்டியை வாரந்தோறும் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த பணத்திற்காக சுரேஷ் பெயரில் கோப்பு கிராமத்தில் இருக்கும் 39.50 சென்ட் நிலத்தை மருந்து கடைக்காரரின் மகன் பெயருக்கு பவர் எழுதி தர வேண்டும் எனக் கோரி பல பத்திரங்களில் கையெழுத்துகள் வாங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த 83 ஆயிரம் பணத்திற்காக இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை வட்டி கட்டியுள்ளதாக சத்தியபாமா கூறியுள்ளார். ஆனால் இதுவரை அந்த நிலத்திற்கான பவர் பத்திரத்தை அவர்கள் தரவில்லை எனவும் மேலும் 12 லட்சம் தந்தால்தான் அந்த இடத்திற்கான பத்திரத்தை தருவோம் என்றும் மருந்து கடைக்காரர் மற்றும் அவரது மகன் மிரட்டுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து தங்களது நிலப்பத்திரத்தை மீட்டுத் தருமாறும் காவல்துறையினருக்கு சத்யபாமா புகார் அளித்துள்ளார்.