திருப்பூரில் ஏடிஎம்மில் பணம் திருட முடியாததால் மர்ம நபர்கள் ஏடிஎம் எந்திரத்தை அப்படியே தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா வங்கி திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிபாளையம் நால்ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வங்கியை ஒட்டி ஏடிஎம் ஒன்று உள்ளது. இந்த ஏடிஎம் எந்திரத்தில் பொதுமக்கள் மற்றும் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பது வழக்கம். அதனைப்போலவே இன்று காலை பொதுமக்கள் சிலர் அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுக்க வந்துள்ளனர். அப்பொழுது ஏடிஎம் மையத்தின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த பொது அங்கு ஏடிஎம் இல்லாததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவத்தை குறித்து போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். இது பற்றி அறிந்த போலீசார் வங்கி ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்பொழுது அன்று 4:30 மணி அளவில் நான்கு மர்ம நபர்கள் காரிலிருந்து இறங்கி ஏடிஎம்-குள் நுழைந்து ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். அதை திறக்க முடியாததால் ஏடிஎம் இயந்திரத்தை பணத்துடன் அப்படியே தூக்கிச் செல்ல முயற்சி செய்துள்ளனர்.
அது முடியாத காரணத்தால் ஏடிஎம் எந்திரத்தை பெல்டால் கட்டி அதனை காரில் இணைத்துக்கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்பு அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் அந்த காரின் நம்பரை வைத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பித்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் குறித்து ஈரோடு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை அறிந்த போலீசார் அந்த வாகனத்தை சோதனையிட்ட போது அங்கு யாருமே இல்லை ஏடிஎம் எந்திரமும் இல்லை. இதனை அறிந்த கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை மற்றொரு காரில் மாற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அந்த ஏடிஎம் எந்திரத்தில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்காக கடந்த 19ஆம் தேதி ரூ 15 லட்சம் பணம் வைக்கப்பட்டுள்ளது என்று வங்கி கணக்காளர்கள் கூறியுள்ளனர். இதற்கு இடையில் பொதுமக்கள் பலர் அதில் பணம் செலுத்தி வந்துள்ளனர். அதனால் அந்த ஏடிஎம்முக்கு இன்னும் பணம் பல லட்சம் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது .எவ்வளவு பணம் இருந்திருக்கலாம் என்று வங்கி அதிகாரிகள் கணக்கிட்டு வந்தனர். இதனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.