காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(21) என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 6 மாதமாக ரம்யா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் நிலுவையில் இருக்கும் பணத்தை வாங்கி வருவதாக ரம்யா கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து ரம்யா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யாவின் பெற்றோர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரம்யாவை தேடி வந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பகுதியை சேர்ந்த நந்தி கேசவன்(24) என்பவரை ரம்யா சென்னையில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு இருவரும் பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.