கோவையில் காந்திபுரம் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் செல்வசிவா. இவரது கடைக்கு காவலர் முகமது ஆஷிக் என்பவர் மதுபோதையில் வந்து சிகரெட் வாங்கியுள்ளார். பின்னர் பேடிஎம் மூலம் பணம் செலுத்திவிட்டதாக முகமது கூற, அதை உறுதி செய்ய போனை காட்டுமாறு செல்வசிவா தெரிவித்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே சண்டை நடக்க, தான் ஒரு போலீஸ் என்றும், தன்னிடமே பணம் கேட்பாயா? என்று கூறி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது திடீரென பேடிஎம் ஸ்கேனரை பறித்துக் கொண்ட அந்த காவலர் அதனை செல்வ சிவாவின் மீது தூக்கி எறிந்துள்ளார்.
இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் கடையிலிருந்து வெளியே செல்லுமாறும் அந்த காவலர் கூறியுள்ளார். அப்போது கடையிலிருந்து வெளியே வந்த போது காவலர் செல்வ சிவாவின் காதை பிடித்து கடித்துள்ளார். இதனால் வலியால் துடித்த செல்வ சிவா உடனடியாக தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் போதையில் இருந்த காவலரை அவருடைய நண்பர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செல்வ சிவாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது