திருட வந்த மர்ம நபர்கள் பணம் குறைவாக இருந்ததால் ஹோட்டலில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ஹோட்டலில் இருந்து கண்ணாடிகள் உடைந்து கொட்டுவது போல சத்தம் கேட்டதால் ரவிச்சந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது ஹோட்டலில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள், மேஜை, பீரோ உள்ளிட்ட இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து கிடப்பதை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஹோட்டலின் மேஜையில் இருந்த ஆதரவற்றவர்களுக்காக பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் போயிருந்தது.
அந்த உண்டியல் சுமார் 100 மீட்டருக்கு அந்த பக்கம் இருக்கும் தென்னந்தோப்பில் உடைக்கப்பட்டு கிடந்துள்ளது. இதுகுறித்து ரவிச்சந்திரன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் பணம் எதுவும் இல்லாததால் ஹோட்டலுக்கு தீவைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.