வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டிய மர்ம நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அலுவலகத்தில் சூப்பிரண்டு அதிகாரியாக எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி என்பவர் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலுவலகத்தில் தொலைபேசி எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. இதனை தெட்சிணாமூர்த்தி எடுத்து பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம நபர் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார்.
இதனையடுத்து அந்த மர்ம நபர் மருத்துவ செலவிற்கு பணம் தேவைபடுவதாகவும் நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு உடனடியாக பணம் போட வேண்டும் என மிரட்டி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் குழப்பமடைந்த தெட்சிணாமூர்த்தி இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அந்த மர்ம நபர் மீண்டும் தொடர்பு கொண்டால் கையும் களவுமாக பிடித்து விடலாம் என அதிகாரிகள் எண்ணிக் கொண்டு இருந்துள்ளனர். ஆனால் அந்த நபர் திரும்ப தொடர்பு கொள்ளவில்லை. இச்சம்பவம் குறித்து தட்சிணாமூர்த்தி எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.