மது அருந்துவதற்கு பணம் தர மறுத்ததால் மனைவியை தாக்கிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள இ.புதுக்கோட்டை கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு நீலாவதி என்ற மனைவி உள்ளது. இந்நிலையில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து குமார் மது அருந்துவதற்காக தனது மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கு நீலாவதி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குமார் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். இதுகுறித்து நீலாவதி பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்துள்ளனர்.