மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் துணி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் துணி வியாபாரியான சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நாகராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் சுரேஷ் தான் விற்பனை செய்த துணிகளுக்கான பணத்தை வசூல் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இவர் உத்தனப்பள்ளி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் சுரேஷின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சென்று சுரேஷின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.