ஆசிரியர் பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21 வட்டார வள மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கு தேவையான உபகரணங்களை அனுப்புவது போன்ற பல்வேறு பணிகளை செய்கிறோம்.
ஆனால் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு கீழ் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் பணிகளை கவனிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதனையடுத்து பள்ளிக்கு பார்வையிடச் செல்லும் போது பத்து நிமிடங்கள் தாமதமாக சென்றால் விளக்கம் கேட்காமல் மெமோ அளித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதை கைவிட வேண்டும் என அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.