நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலமுடன் இருப்பது, அவர்களுக்கு மட்டுமின்றி உடன் பணிபுரிவோருக்கும் பயன் விளைவிப்பதுடன், நிறுவனத்திற்கும் லாபம் ஏற்படுத்தும் எனும் நோக்கில் ஒருசில நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவிப்பது வழக்கம் ஆகும். அந்த வகையில் ஊழியர்களுக்கு கூடுதலாக ஊக்கதொகை, பரிசு ஆகியவற்றை வழங்குதல், சுற்றுலா செல்ல வழிவகை செய்தல் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தும். இந்த நிலையில் மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்றான மீஷோ என்ற நிறுவனம் தன் பணியாளர்களின் மன நலன் சார்ந்த விசயங்களை மனதில் கொண்டு நிறுவனம் முழுமைக்கும் 11 நாட்கள் தொடர் விடுமுறையை தொடர்ந்து, 2வது ஆண்டாக அறிவித்துள்ளது.
இதன் காரணமாக பரபரப்பு நிறைந்த பண்டிகைக் கால விற்பனை நிறைவை எட்டியதும், நிறுவன பணியாளர்கள் அனைவரும் தங்களது பணியிலிருந்து முழுவதும் விடுபட்டு மனநலன் சார்ந்த விசயங்களுக்கு முக்கியத்துவம் அளித்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் நிறுவனரான சஞ்சீவ் பார்ன்வால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தொடர்ந்து 2-வது ஆண்டாக நிறுவனம் முழுவதும் 11 தினங்கள் விடுமுறையை நாங்கள் அறிவித்துள்ளோம்.
வர இருக்கிற பண்டிகைக் காலம் மற்றும் பணிசார்ந்த வாழ்க்கையில், சமநிலையின் முக்கியத்துவம் போன்றவற்றை கருத்தில்கொண்டு, எங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வரும் அக்டோபர் 22-ஆம் தேதி முதல் நவம்பர் 1ம் தேதி வரை தங்களை சரிசெய்து கொள்வதற்கும், புதுப்பித்து கொள்வதற்கும் வேண்டிய தேவையான விடுமுறையை எடுத்துகொள்வார்கள் என்று தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்பாக அந்நிறுவனம் எல்லை இல்லாத அளவில் பணிசெய்யும் அடிப்படையிலான மாதிரியை அறிவித்ததுடன், காலவரையற்ற உடல்நல விடுமுறை, பாலின நடுநிலைமையுடன் பெற்றோருக்கான 30 வாரங்கள் வரை விடுமுறை மற்றும் 30 நாட்கள் வரை பாலின மாற்றத்திற்கான சிகிச்சைக்கு தேவையான விடுமுறை போன்றவற்றை வழங்கி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.