ஆயுதப்படை போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் இருக்கும் பூபொழில் நகரில் சரவணகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழக ஆயுதப்படை போலீசில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணகுமாருக்கு சுவேதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று சரவணகுமார் பணியில் இருந்துள்ளார். அப்போது சரவணகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணகுமாரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சூதாட்டத்தில் பணத்தை இழந்த சரவணகுமார் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.