துப்புரவு பணி மேலாளரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்த முயன்ற தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் வசித்து வருபவர் அசோக்குமார்(53). இவர் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது அருந்திவிட்டு சரிவர வேலை செய்யாமல் இருந்துள்ளார். இதனால் இவரை துப்புரவு பணி மேலாளர் பாஸ்கர்(31) பணி நீக்கம் செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அசோக் குமார் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு மாதவரம் பழைய பேருந்து நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த மேலாளர் பாஸ்கரிடம் வாக்குவாதம் செய்தார். திடீரென்று தான் பதுக்கி வைத்திருந்த பெட்ரோலை பாஸ்கர் தலையில் ஊற்றி தீ வைத்துக் கொளுத்த முயன்றுள்ளார். இதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதுகுறித்து மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் வழக்குப்பதிந்து அசோக் குமாரை கைது செய்துள்ளனர்.