அடுத்த மூன்று மாதங்களில் வரவிருக்கும் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்று மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு பொருளாதாரம் மற்றும் மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊரடங்கு தொடர்புகளை 5 கட்டங்களாக அறிவித்து நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பண்டிகை காலம் தொடங்க உள்ளது. இந்த மாதம் துர்கா பூஜை, தசரா மற்றும் விஜயதசமி, அடுத்த மாதம் தீபாவளி, டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை போன்ற பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.
இந்தியாவில் முக்கிய கலாச்சாரத்தில் ஒன்றாக பண்டிகை காலம் உள்ளது. அனைத்து குடும்ப உறவினர்களும் ஒன்றுகூடி பண்டிகைகளை கொண்டாடி மகிழ்வர்.அதனால் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வரப்போகும் பண்டிகை கொண்டாடுவதற்கு மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயத்தில் பண்டிகை கொண்டாடுவது மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் பண்டிகைகளை எப்படி கொண்டாடுவது என்பது குறித்த வழிகாட்டும் நெறிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,
- பண்டிகை கொண்டாட்டங்கள் அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறாமல் தங்கள் வீட்டுக்குள்ளே கொண்டாட்டங்களை வைத்துக் கொள்ள வேண்டும்.
- 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், வியாதிகள் உடையவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே தங்க வேண்டும்.
- பண்டிகை காலங்களில் பதிவு செய்யப்பட்ட பக்தி இசை மற்றும் பாடல்கள் மட்டுமே இசைக்கப்பட வேண்டும். மேலும் பாடகர்கள் அல்லது பாடகர் குழுக்களுக்கு அனுமதி கிடையாது.
- சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதை கருத்தில் கொண்டு,கொண்டாட்ட இடங்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட கூடிய அனைத்து இடங்களிலும் போதுமான தரைப்பரப்பு மற்றும் சரியான அடையாளங்களை கொண்டிருக்க வேண்டும்.
- அந்த இடங்களில் தொற்று அறிகுறியற்ற பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
- பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். அனைவரும் 6 அடி இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதற்கான அடையாளங்கள் கட்டாயம் வரைந்திருக்க வேண்டும்.
- பேரணிகள், ஊர்வலங்கள் மற்றும் சிலை கரைப்பு போன்றவற்றில் மக்கள் பங்கேற்பதில் குறிப்பிட்ட எண்ணிக்கை வரம்பினை கடைபிடிக்க வேண்டும்.
- நீண்ட தூரங்களுக்கு பேரணி மற்றும் ஊர்வலம் நடத்தும் போது ஆம்புலன்ஸ் சேவை உடன் இருக்க வேண்டும்.
- கண்காட்சிகள், பூஜை பந்தல்கள், ராம்லீலா போன்ற நிகழ்வுகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் நீடிக்கும் நிகழ்வுகள், பந்தல்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் ஆகியவற்றை குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை மட்டுமே கொண்டு நடத்த வேண்டும்.
- அவ்வாறு கொண்டாடப்படும் நிகழ்ச்சிகளில் இருக்கைகள் தனிமனித இடைவெளியை பின்பற்றி அமைந்திருக்கவேண்டும்.கடைகள் மற்றும் சிற்றுண்டி கூடங்கள் ஆகியவற்றில் அனைத்து
- நேரங்களிலும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சமூக சமையல் அறைகள் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகளில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
- நாடகம் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் அனைத்தும் மேடை கலைஞர்களுக்கும் பொருந்தும்.
- மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது மற்றும் முக கவசம் அணிவது ஆகியவற்றை ரகசிய கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும்.
- பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
- மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் அனைவரும் கடைபிடித்து பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.