இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை. இந்த ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அதன் மறுநாள் 5 ஆம் தேதி விஜய தசமி கொண்டாடப்பட உள்ளது. இதனால் திங்கட்கிழமை தவிர்த்து சனி, ஞாயிற்றுக்கிழமை என ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் என்பதால் சென்னையில் வசிப்பவர்கள் வருகின்ற 30ஆம் தேதி முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்படுவார்கள் இதனால் பஸ் ரயில்களின் ஏற்கனவே முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே பஸ், ரயில்களின் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு உள்நாட்டு விமான கட்டணம் திடீரென பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி அதன்படி சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல வழக்கமாக ரூ.4,500 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை அதிகரித்து உள்ளது. ஜெய்ப்பூருக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதனைபோல கொல்கத்தாவுக்கு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.22 ஆயிரம் வரையிலும், ஆமதாபாத்துக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரம் வரையிலும், புனேவுக்கு ரூ.9 ஆயிரம் வரையிலும், மும்பைக்கு ரூ.16 ஆயிரம் வரையிலும், மதுரைக்கு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரையிலும் கட்டணங்கள் உயர்ந்து உள்ளன. மேலும் சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் பயணிகள் கட்டணமும் அதிகரித்து உள்ளது. இது பற்றி விமான நிறுவனங்கள் தரப்பில் விசாரித்த போது, பயணிகள் கூட்டத்தால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. குறைந்த கட்டணத்தில் குறிப்பிட்ட இருக்கைகள் மற்றும் ஒதுக்கிவிட்டு மற்ற இருக்கைகளுக்கு இரண்டு அல்லது மூன்று விதமான கட்டணங்களை நிர்ணயித்திருப்போம். முதலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு குறைந்த கட்டண டிக்கெட்டும், அதன் பிறகு வருபவர்கள் படிப்படியாக கட்டணம் அதிகரிக்கும். இதுதான் நடைமுறையில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் விமான நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளதாக கூறி இந்த ஆண்டு இரண்டு முறை டிக்கெட் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.