பள்ளி மாணவி கொலை வழக்கில் 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த வாரம் தலையில் பலத்த காயங்களுடன் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்த பொதுமக்களை விசாரித்தபோது அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில் சிகப்பு கலர் டி ஷர்ட் அணிந்த நபர் ஓடினார் என்பதாகும். இதனை கொண்டு இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து வந்தனர் காவல்துறையினர்.
மேலும் செல்போன் சிக்னலை கொண்டு கொலை நடந்த இடத்திலிருந்து 300 செல்போன் அழைப்புகள் கொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அருகாமையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் சுனில் என்ற 21 வயது இளைஞனிடம் விசாரணை நடத்தியபோது அந்த இளைஞன் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மேலும் அவனது நண்பர்களும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. அந்த இளைஞன் சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று சிறுமியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி இளைஞரின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து கோபமுற்ற அந்த இளைஞர் சிறுமியை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் சிறுமியின் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த இளைஞரின் நண்பர்கள் இருவர் சிறுமியின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். பின்பு சிறுமி உயிரிழந்த உடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர் கிராமத்துக்கு திரும்பிய மூன்று பேரும் எதுவும் தெரியாதது போல் நடந்துள்ளனர். மேலும் அந்த இளைஞரிடம் போலீசாரால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சிறுமியை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி போராட்டம் நடந்தபோது இந்த இளைஞரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.