வாடகை கார்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கு சாலை வரியை ரத்து செய்யக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சாலை வரியை ரத்து செய்வது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்:- ” தமிழ்நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பவர்களில் சுற்றுலா உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான வாடகை கார் ஓட்டுனர்களும், உரிமையாளர்களும் அடங்குவர். பல வழிகளில் வருவாய் இழப்பையும், வாழ்வாதார பாதிப்புகளையும் எதிர் கொண்டு வரும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை எந்த நிவாரண உதவியும் கொடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இந்த சூழலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்த வேண்டிய சாலை வரியை செலுத்த வேண்டும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தரப்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 மாதங்களாக போக்குவரத்து இயங்காததால், வாடகை கார்களின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களால் ஒரு ரூபாய் கூட வருவாய் ஈட்ட முடியவில்லை. இத்தகைய சூழலில் அவர்களை மேலும் மேலும் பண அழுத்தத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாக்கக் கூடாது. எனவே, கொரோனா சூழல் ஒழுங்கு அடையும் வரை அனைத்து வகையான வாடகை கார்களுக்கும் சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.