நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகே ஊழல் அதிகரித்ததாக சமாஜ்வாடி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளான 500-1000 ஆகியவை மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகளை இருப்பு வைத்திருந்தவர்கள் அவற்றை வாங்கில் செலுத்தி அதற்கு பதில் வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கையை தற்போது வரை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நேற்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்தியாவில் கருப்புப் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக பிரதமர் திரு. மோடி நேற்று தெரிவித்தார். பிரதமரின் இந்த கருத்துக்கு சமாஜ்வாடி தலைவர் திரு. அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகே நாட்டில் ஊழல் அதிகரித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.