திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக நத்தம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகளும், திண்டுக்கல் தொகுதியில் 397 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நத்தம் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும் திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் துணை ராணுவ படையினர் பதற்றமான பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் காவல் துறையினரால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தல் பொது பார்வையாளர் பாபுஷன் திண்டுக்கல் நத்தம் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகளை நேற்று முன்தினம் திடீர் ஆய்வு செய்தார். இதில் சமுத்திராப்பட்டி, எரமநாயக்கன்பட்டி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடிகளை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பறக்கும் படையினர் செயல்பாடுகள், வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள், வாகன சோதனை ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடும்படி அறிவுறுத்தியுள்ளார்.