பயணிகள் மின்சார ரயிலை வழி மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் நீண்ட நேரம் காத்து கொண்டிருந்தனர். ஆனால் நேற்று காலை முதல் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதுகுறித்து ரயில்வே ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டதால் சென்னை செல்லும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதனால் கோபமடைந்த பயணிகள் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரயிலை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது எண்ணூர் முதல் கத்திவாக்கம் வரை இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயில்கள் இயக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் சுமார் 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.