இந்தியாவில் மறு விற்பனைக்கான கார் சந்தை நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும் நிலையில் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வருகை கூடுதல் ஊக்கத்தை நிறுவனங்களுக்கு அளித்துள்ளது. அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட கார்களை வியாபாரிகள் மூலம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல், வெளிப்படை தன்மையை மேம்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களை வாங்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வியாபாரிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் அங்கீகாரச் சான்றிதழ் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் பிறகு வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழை புதுப்பித்தல் அல்லது தகுதி சான்றிதழை புதுப்பித்தல், நகல் பதிவு சான்றிதழ், தடையின்மை சான்றிதழில் உரிமையை மாற்றுதல் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மின்னணு பயண வாகன பதிவேட்டை பராமரிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளதோடு, அதில் பயண தூரம், பயணத்தின் நோக்கம், ஓட்டுனர் மற்றும் நேரம் போன்ற விவரங்களும் இருக்க வேண்டும் போன்ற நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் பழைய கார்களை விற்பனை செய்யும் சந்தை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், சமீப காலமாகவே பழைய வாகனங்களை வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உயர்ந்து வருகிறது. மேலும் மத்திய அரசின் புதிய விதிமுறைகள் மூலம் பழைய கார் விற்பனையில் நடைபெறும் மோசடிகளை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.