Categories
மாநில செய்திகள்

பதிவு, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு: இந்த வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு…. கவலையில் வாகன ஓட்டிகள்…..!!!!!

சொத்துவரி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை அதிகரிப்பு என்று அடுத்தடுத்து வரும் உயர்வுகள் பொதுமக்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து பின்னோக்கி தள்ளுவதாக இருக்கிறது. இப்போது கூடுதலான ஒருஉயர்வானது வாகனஓட்டிகளுக்கு நெரிசலை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் இனி அதற்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனபதிவும், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வாகனபதிவு சான்றிதழ் மற்றும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான கட்டணம் 3-10 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த புது கட்டணம் உயர்வு சென்ற 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. 15 ஆண்டுகளுக்கு மேல் கார் வைத்திருப்பவர்கள் வாகன பதிவு சான்றிதழை புதுப்பிப்பதற்கு ரூபாய் 600 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ரூபாய் 5 ஆயிரம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இருசக்கர வாகனங்களுக்கான வாகனபதிவு சான்றிதழுக்கான கட்டணம் ரூபாய் 300ல் இருந்து ரூபாய்.1,000 ஆகவும், ஆட்டோக்களுக்கு ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை இருந்தது ரூ.10 ஆயிரம் ஆகவும், இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு ரூ.5 ஆயிரம் வரை இருந்தது ரூ.40 ஆயிரம் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பின் 15 வருடங்களுக்கு மேலான வணிகரீதியான வாகனங்களுக்கும் கட்டணம் அதிகளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்து தகுதிக்கான புதுப்பிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு நேரடியாக சென்றால் ரூபாய் 400-ம், தானியங்கி முறையில் விண்ணப்பித்தால் ரூ.500-ம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று 3 சக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்களுக்கு நேரடியாக சென்றால் ரூபாய் 800-ம், தானியங்கி முறையில் விண்ணப்பித்தால் ரூ.1,000-மும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனத்துக்கு நேரடியாக சென்றால் ரூ.800-ம், தானியங்கி முறையில் ரூ.1,300-ம், கனரக வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனத்துக்கு நேரடியாக சென்றால் ரூ.1,000-ம், தானியங்கி முறையில் ரூ.1,500-ம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
அத்துடன் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு தகுதிக்கான புதுப்பிப்பு சான்றிதழ் வழங்குவதற்கு மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.1,000 ஆகவும், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரத்து 500 ஆகவும், இலகு ரக வாகனங்களுக்கு ரூ.7 ஆயிரம் ஆகவும், நடுத்தர சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் ஆகவும், கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகுதி சான்றிதழ் புதுப்பிப்பதற்கான காலஅவகாசம் முடிந்து அதனை புதுப்பிக்கும் வரையிலான ஒவ்வொரு நாட்களுக்கும் ரூபாய் 50 அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. அதே நேரம் புது வாகனங்களை பதிவுசெய்வதற்கான சான்றிதழ் கட்டணம், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300 ஆகவும், 3சக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆகவும், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆகவும் இருக்கிறது. அதன்பின் ஸ்மார்ட் கார்டு வடிவில் வாகன பதிவு சான்றிதழ் வழங்க வேண்டும் எனில் வாகன ஓட்டிகள் ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும்.
அத்துடன் வாகனபதிவு சான்றிதழ் புதுப்பிக்க காலதாமதம் ஆனால் மாதந்தோறும் மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.300ம், அனைத்து வகை போக்குவரத்து பயன்பாட்டுக்கு அல்லாத வாகனங்களுக்கு ரூ.500ம் அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கமிஷனரக அதிகாரிகள் கூறியிருப்பதாவது “மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்து புதிய கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சென்ற வருடம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியிட்டிருந்தது. அந்த அடிப்படையில் தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி நாடு முழுதும் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வாஹன் சாப்ட்வேரில் மாற்றங்களை செய்து இருக்கிறது. அதனைத்தான் தமிழகத்திலுள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் பயன்படுத்துகிறது” என்று கூறினர். 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கான பதிவுசான்றிதழ், தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணம் அதிகரிக்கப்பட்டதற்கு வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெறவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |