பத்திரப்பதிவுக்கு சாட்சியாக வருபவர்களிடம் புகைப்படம் மற்றும் கைரேகை கட்டாயம் பெறப்படும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்கள் மற்றும் கைரேகைகள் பெறப்படுகிறது.
ஆனால் இதுநாள் வரை சாட்சிகளிடம் புகைப்படம், கைரேகை வாங்கியதில்லை. அவர்களிடம் இருந்து கையெழுத்து மட்டுமே பெறப்பட்டு வந்தது. குறிப்பாக ஒரு ஆவணத்துக்கு குறைந்தது இரண்டு நபர்களிடம் சாட்சி கையெழுத்து பெறும் நடைமுறை தான் இருந்து வந்தது.
சில சமயங்களில் விற்பவர் அல்லது வாங்குபவர் தரப்பில் யாரும் வராத நிலையில் ஆவண எழுத்தர், அலுவலக ஊழியர்கள் யாராவது, சாட்சியாக கையெழுத்திடுவர். வீடு, மனை விற்பனை தரகர்களும் சாட்சியாககையெழுத்து போடுவர்.
குறிப்பாக, சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு நாளில் 100க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடக்கும் பட்சத்தில், அதில் இடைதரகர்கள் அழைத்து வரும் சாட்சியங்களே அனைத்து பத்திரப்பதிவுக்கு கையெழுத்து போட்டு வந்தனர். இதனால், சில நேரங்களில் பத்திரப்பதிவில் மோசடி நடைபெறுவது தவிர்க்க முடியாததாக இருந்தது.
இந்நிலையில் இதுபோன்ற மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரே நபர் அனைத்து ஆவணங்களின் சாட்சியாக கையெழுத்து போடுவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை கொண்டு பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பத்திரப் பதிவுக்கான சாட்சிகள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் விபரம்
* பத்திரங்களை பதிவு செய்யும் போது சாட்சியாக வருவோரின் புகைப்படத்தையும், கை ரேகையையும் பதிவு செய்ய வேண்டும். சாட்சியாக வருவோரின் அடையாள ஆவணத்தையும், தெளிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
*ஒரே நபர் தொடர்ந்து ஆறு பத்திரங்களுக்கு மேல் கையெழுத்திட சார் – பதிவாளர் அனுமதிக்கக் கூடாது. அவசியம் ஏற்பட்டால் மாவட்ட பதிவாளரிடம் அனுமதி பெற்ற பின் சம்பந்தப்பட்ட பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும்.
இந்த புதிய கட்டுப்பாடுகள், இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் போலி ஆவண பதிவு தடுக்கப்படுவது மட்டுமின்றி ஒரே நபர் அனைத்து ஆவணங்களிலும் கையெழுத்து போடுவது தடுக்கப்படும்.