பாபா ராம்தேவ் பத்திரிகையாளரை கடுமையாக எச்சரித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டார். அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் பெட்ரோல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்கும் ஆட்சியை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறியிருந்தீர்களே என கேட்டார். அதற்கு பாபா ராம்தேவ் நான் தான் சொன்னேன். அதற்கு என்ன, உன்னால் என்ன செய்ய முடியும். இது மாதிரியான கேள்விகளை கேட்க வேண்டாம் என கண்டித்தார். ஆனால் பத்திரிக்கையாளர் அதே கேள்வியை மீண்டும் கேட்டுள்ளார். இதற்கு பாபா ராம்தேவ் நான் தான் அன்று கூறினேன். இப்ப அதற்கு என்ன செய்ய வேண்டும். இது மாதிரியான கேள்விகளை கேட்பது நல்லதல்ல. நீ நல்ல பெற்றோருக்கு பிறந்து இருப்பாய் என்று நினைக்கிறேன் என கூறினார்.
இவர் கூறிய வார்த்தைகளை கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர் கூறிய வார்த்தைகளை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் பாபா ராம்தேவ் அரசின் விலை உயர்வை ஆதரித்து பேசினார். அதாவது எரிபொருள் விலை குறைந்தால் வரி கிடைக்காது என்று அரசு கூறுகிறது. . இதனையடுத்து வரி கிடைக்காவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது சாலைகள் அமைப்பது போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்படும். நான் விலை உயர்வை கண்டிக்கிறேன். இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நான் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை உழைக்கிறேன் என்று கூறினார்.