தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய குழு அமைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்ட சபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிக்கையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என அறிவித்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தமிழக செய்தித்துறை அமைச்சர் 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற பேரவை பேரவைக் கூட்டத் தொடரில் நடைபெற்ற செய்தி மற்றும் விளம்பரம் தொடர்ப்பான மானிய கோரிக்கை மீதான அறிவிப்புகளில் தமிழகத்தில் முதல் முறையாக உழைக்கும் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக தமிழக முதல்வர் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவதோடு, நலவாரிய உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் அளித்திடும் வகையில் ‘பத்திரிக்கையாளர் நல வாரியம்’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.மேலும் பத்திரிகையாளர் நல வாரியத்துக்கு வரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, பயனாளிகளை தேர்வு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு பத்திரிகையாளர் நல வாரியக் குழு ஒன்றை அமைத்து அதற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து பத்திரிகையாளர் நல வாரியம் செயல்பட வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.