பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டத்தில் பணிக் கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்ச வரம்பு 3 லட்சம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற பத்திரிகையாளர்களின் சமூகப்பணியை கருத்தில் வைத்து நலிவடைந்த பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கும் திட்டம் 1986 ஏப்ரல் 14 முதல் செயல்படுத்தப்படுகிறது. இப்போது ஓய்வூதியம் பெறுவதற்கான நிபந்தனைகளை தளர்த்தி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்பே சட்டசபையில் அறிவித்தார்.
அந்த வகையில் பணியிலிருந்து ஓய்வுபெற்றவுடன் பத்திரிகையாளர் பெற்ற பணிக்கொடை 3 லட்சம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதேபோன்று பணியிலிருந்தபோது பத்திரிகையாளர் பெற்ற அதிகபட்ச ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயிலிருந்து, 4 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாதம் 18ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்குரிய அரசாணையை செய்தித்துறை செயலர் மகேசன் காசிராஜன் வெளியிட்டு உள்ளார். இதற்கிடையில் திருத்தப்பட்ட தகுதிகள் தவிர்த்து பத்திரிகையாளர் ஓய்வு ஊதியம் வழங்குவது தொடர்பான இதர தகுதிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.