zomato நிறுவனத்தின் பத்து நிமிடத்தில் உணவு டெலிவரி திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.
வீட்டிற்கு உணவு எடுத்து வரும் zomato நிறுவனத்தின் 10 நிமிட சேவை திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினையும் இருக்காது என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். ஹோட்டல்களில் ஆர்டர் செய்யும் உணவை 30 நிமிடங்களில் வீடுகளில் சென்று வழங்கும் சேவையை zomato நிறுவனம் செய்து வருகிறது.
ஹோட்டல்களில் தூரத்தையும், உணவின் வகையையும் பொருத்து இந்த கால அவகாசம் அதிகரிக்கிறது. இந்நிலையில் இனி பத்து நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என zomato நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் உணவை டெலிவரி செய்யும் ஊழியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபற்றிய நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்திருக்கிறார். அதுபற்றி அவர் கூறும்போது, “இந்த பத்து நிமிட டெலிவரி சேவை வாடிக்கையாளர்களின் வீடு அருகே அமைந்துள்ள சில பிரபலமான ஹோட்டல்களில் இருந்து குறிப்பிட்ட உணவு வகைகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும் உணவை தாமதமாக சென்று சேர்க்கும் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. அதேபோல் சரியான நேரத்திற்கு சேர்க்கும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை கிடையாது. அதனால் ஊழியர்களின் பாதுகாப்பு பாதிக்கப்பட வாய்ப்பில்லை என அவர் கூறியுள்ளார்.