Categories
அரசியல் கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பத்பநாபபுரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

1957ஆம் ஆண்டு வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே இருந்த பத்மநாபபுரம் குமரித் தந்தை என அழைக்கப்படும் மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற பெரும் போராட்டத்திற்குப் பின் தமிழகத்துடன் இணைந்தது. பத்மநாபபுரம் அரண்மனை, ஆசியாவிலேயே உயரமான மாத்தூர் தொட்டி பாலம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் இங்கு அமைந்துள்ளன. பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ், ஜனதா தளம், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளனர்.

ஸ்தாபன காங்கிரஸ், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 1 முறை வென்றுள்ளனர். திமுக 3 முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது. தற்போதைய எம்எல்ஏ திமுகவின் மனோ தங்கராஜ். பத்மநாபபுரம் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,38,290 ஆகும். பேச்சிப்பாறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலை கிராமங்களில் குடிநீர் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். தொகுதியில் உள்ள வளங்கள், நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. புதிதாக ரப்பர் தொழிற்சாலை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மலைப் பகுதிகளில் விளையும் வாசனை பொருள்கள் தென்னை நார் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாகும். ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை நாட்களை 150 நாட்கள் ஆக அதிகரிக்க வேண்டும் என்பதும், ஊதியத்தை 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதும் மக்களின் வேண்டுகோளாகும். மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்றும் மக்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொகுதி முழுவதும் பரவலாக எம்எல்ஏவுக்கு நல்ல பெயரே நிலவுகிறது.

Categories

Tech |