பேருந்து மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் ஆனந்தகுமார்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சர்க்கரை ஆலையில் மேலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு சாந்தி(64) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தென்சங்கம்பாளையம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கரையாஞ்செட்டிபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி ஆனந்தகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சாந்தியை அக்கம்பக்கத்தினர் மீது பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆனந்தகுமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காலை நேரம் பனிமூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் முன்னால் சென்ற பேருந்து தெரியாமல் விபத்து ஏற்பட்டது உறுதியானது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.