கோவை மாவட்டத்திலுள்ள சூலூர் சடையப்பதேவர் வீதியில் வசித்து வருபவர் கந்தவேல் (48). இவரது மனைவி ரமாபிரபா (41). இந்த தம்பதியினரின் மகன் அருண் (16). இதில் கந்தவேல் சென்னை வண்டலூரிள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியதால் அவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இதனால் மகன் அருண் சென்னையிலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இதையடுத்து கொரோனா காரணமாக ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி கள்ளிப்பாளையத்திலுள்ள அவருடைய நண்பரது பண்ணை வீட்டில் கந்தவேல் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அதன்பின் அங்கு மாணவன் அருண் அவருடைய ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாட்டினை பதிவிறக்கம் செய்து தொடா்ந்து விளையாடி வந்தார். இதன் காரணமாக மனநிலை பாதித்து கடந்த 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 26-ம் தேதி வீட்டில் தூக்குபோட்டு அருண் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக புளியம்பட்டி காவல்துறையினர் தற்கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இவ்வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் நேற்று வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.