கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் சரோஜா மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் முகவரி கேட்பது போல் நடித்து சரோஜா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சரோஜா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சிங்காநல்லூர் வசந்தா மில் ரோடு பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு சரவணன் கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். பப்ஜி விளையாட்டிற்கு அடிமையான சரவணன் விளையாட்டு பொருட்கள் வாங்க பணம் தேவைப்பட்டதால் சரோஜாவின் தங்க சங்கிலியை பறித்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.