லோடு வேன் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வியாபாரி பலியான நிலையில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் லோடு வேன் ஓட்டுனரான தாமரைக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தினமும் தனது லோடு வேனில் காய்கறி வியாபாரிகளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல தாமரைக்கண்ணன் அதே பகுதியில் வசிக்கும் வியாபாரிகளான குமார், ரமேஷ், முருகேசன் ஆகிய 3 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே காய்கறிகளை வாங்கிக்கொண்டு லோடு வேன் ஈஞ்சம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து முன்னால் சென்ற லோடு வேன் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் லோடு வேன் தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. இதில் படுகாயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனை அடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாமரைக்கண்ணன், குமார், ரமேஷ் ஆகிய 3 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுனரான சலேந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.