ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலியான நிலையில், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை வடக்கூர் அம்மன் கோவில் தெருவில் முருகன்- காயத்ரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதமே ஆன மாதேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலை தொடர்பாக குடும்பத்துடன் வெளியூருக்கு சென்ற முருகன் மீண்டும் வீட்டிற்கு ஆட்டோவில் வந்துள்ளார். இந்த ஆட்டோவை நாகராஜன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் தோவாளை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த அரசு விரைவு பேருந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். முருகன், காயத்ரி, அவர்களது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.