லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் கிளீனர் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கும்மனூரிலிருந்து ஜல்லி கலவை எந்திர லாரி ஒன்று நேற்று ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல பெங்களூரு நோக்கி தனியார் ஆம்னி பேருந்து கோவையில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை முருகேசன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது கிளீனரான ஆல்பர்ட் என்பவர் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் போலுப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது ஆம்னி பேருந்து ஜல்லி கலவை இயந்திர லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஆல்பர்ட் பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனையடுத்து படுகாயமடைந்த பேருந்து பயணிகளான செல்லதுரை, காமராஜ், ஹரி, சுரேஷ் உள்பட 8 பேரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆல்பர்ட்டின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.