சாலையோரம் நின்ற வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனுமன் பேட்டை வள்ளலார் தெருவில் கண்டெய்னர் லாரி ஓட்டுனரான ஜோதி(28) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் இருந்து ஜோதி கார் உதிரி பாகங்களை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது ரப்பர் பொருட்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்தது.
அந்த பகுதியில் மின்விளக்கு எரியாததால் ஜோதிக்கு கண்டெய்னர் லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவில்லை. இதனால் வேகமாக வந்த ஜோதி கண்டெய்னர் லாரி வலது புறம் நிற்பதை பார்த்து இடது புறமாக வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய வாகனம் முன்னால் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த கண்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜோதி இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அஜாக்கிரதையாக சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு சென்ற மாரிகுட்டி(42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.