கார் மோதிய விபத்தில் பாத யாத்திரையாக சென்ற 2 பேர் பலியான நிலையில், 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை சாமிநாதன், மகன்கள் தவபிரியன், கமலேஷ், மைத்துனர் சேகர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூரிலிருந்து ஒட்டன்சத்திரம் வரை காரில் சென்றுள்ளனர். அதன்பின் 4 பேரும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் சத்திரப்பட்டி அருகில் இருக்கும் பெரிய பாலத்தில் நடந்து சென்றபோது அவ்வழியாக வேகமாக வந்த கார் நான்கு பேர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சாமிநாதன் மற்றும் சேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தவபிரியன் மற்றும் கமலேஷ் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன்பின் உயிரிழந்த சாமிநாதன் மற்றும் சேகர் ஆகிய இருவரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிற்காமல் சென்ற அந்த காரின் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.