இருசக்கர வாகனம் மீது கார் பயங்கராமாக மோதியதில் தந்தை-மகன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானபட்டியை அடுத்துள்ள அ.ரங்கநாதபுரத்தில் செல்லபாண்டி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவருக்கு கௌரி(26) என்ற மனைவியும், ராஜபாண்டி(4) என்ற மகனும் உள்ளார். இந்நிலையில் இவரது உறவினர் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை பார்ப்பதற்காக செல்லபாண்டி, தனது மனைவி மகன் மற்றும் உறவினர் பழனியம்மாள்(43) ஆகியோரை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதனையடுத்து உறவினரை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது பொம்மிநாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து தேனியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த கோரவிபத்தில் செல்லபாண்டி மற்றும் அவரது மகன் ராஜபாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனைதொடர்ந்து கௌரி, பழனியம்மாள் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.