கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதிய நிலையில் மெக்கானிக் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள மாலையம்மாள்புரத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வந்துள்ளார். கூடலூர் மின்மோட்டார் பழுதுபார்க்கும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் ஜெயபால் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதற்கிடையே பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் முன்னால் இருந்த கார் மீது மோதியதால், அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஜெயபால் மீது ஏறியுள்ளது. இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையறிந்து விரைந்து சென்ற கூடலூர் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து ஜெயபால் மீது மோதிய கார் டிரைவர் ஜெனித் மற்றும் மற்றொரு கார் டிரைவர் முகமது இஷாத் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.