மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வழக்கறிஞர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அடையகருங்குளம் நாராயணசாமி கோவில் தெருவில் வழக்கறிஞரான சிவசாமிநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏற்கனவே அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவராகவும், அம்பை யூனியன் கவுன்சிலராகவும் இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிவசாமிநாதன் அம்பையிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் அடையகருங்குலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் அம்பை-பாபநாசம் சாலையில் இருக்கும் தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவசாமிநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசாமிநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.