மோட்டார் சைக்கிள் மீது டிராவல்ஸ் பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் காரியபெருமாள் கோவில் தெருயில் கருணாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான ராகுல்குமார்(32) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு கடையில் ராகுல் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார். இதனையடுத்து ராகுல் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணி அளவில் வீட்டிற்கு புறப்பட்டார்.
இவர் மேலவீதி பெரியார் சிலை அருகே சென்ற போது, எதிரே வந்த டிராவல்ஸ் பேருந்து ராகுல்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ராகுலை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராகுல்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.