மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் தலை நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜகடை பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது டேம் ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த டேங்கர் லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த செந்தில் மற்றும் ராஜசேகர் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி அவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.