திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு சத்தியமூர்த்தி நகரில் மறுவரசி(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருச்சியில் உள்ள ஜெயம் நர்சிங் ஹோமில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது அண்ணன் விஜய் என்பவருடன் மறுவரசி மோட்டார் சைக்கிளில் அருணாச்சலம் மன்றம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது கரூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தனியார் பேருந்து ஓட்டுனரான ஜெகநாதன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.