கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அப்புகொட்டாய் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனுஷ்(16) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனுஷ் பண்ணந்தூரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற போது சிவபாரத் என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மேலும் அவ்வழியாக வந்த தம்பதியின் மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவபாரத்(21), கணவன், மனைவியான புதுயுகம்(45), கௌரம்மாள்(42) ஆகிய மூன்று பேரையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனுஷின் உறவினர்கள் சிவபாரத்தை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.