மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் நடுத்தெருவில் முன்னாள் ராணுவ வீரரான கிருஷ்ணமூர்த்தி(68) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு விக்ராந்த் என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறி சென்றுள்ளார்.
இந்நிலையில் பழைய நீதிமன்றம் அருகே சென்றபோது காளி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கிருஷ்ணமூர்த்தி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த விபத்து குறைத்து வழக்குபதிவு செய்த போலீசார் காளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.